வீட்டு காம்பவுண்டு சுவரில் அரசு பஸ் மோதி விபத்து
திருவட்டார் அருகே வீட்டு காம்பவுண்டு சுவரில் அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் படுகாயம் அடைந்தார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே வீட்டு காம்பவுண்டு சுவரில் அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் படுகாயம் அடைந்தார்.
அரசு பஸ்
முதலாரில் இருந்து நேற்று காலையில் ஒரு அரசு பஸ் தக்கலைக்கு புறப்பட்டது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் இருந்தனர். அந்த பஸ் காலை 8 மணி அளவில் திருவட்டார் அருகே குமரன்குடி மூன்றுமுனை சந்திப்புக்கு வந்தபோது, அந்த வழியாக ஒரு சொகுசு கார் வந்தது. காருக்கு வழி விடுதற்காக டிரைவர் பஸ்சை இடப்புறமாக திருப்பினார். அப்போது, பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்டு சுவரில் மோதி நின்றது.
இதில் பஸ்சில் இருந்த முதலாரை சேர்ந்த பிரேமா (வயது40) தலையில் கம்பி இடித்து படுகாயம் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மீட்பு பணி
விபத்து நடந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பிரேமா தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் பஸ்சில் இருந்த பிற பயணிகள் வேறு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கிரேன் மூலம் பஸ்சை மீட்கும் பணி நடந்தது.
டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டதால் சாலையோரம் 10 அடி ஆழத்தில் இருந்த வயலில் பஸ் கவிழ்வது தவிர்க்கப்பட்டது.
அந்த பகுதியில் 2 மாதத்துக்கு முன்னர்தான் தார் சாலை போடப்பட்டது. அப்போது குமரன்குடியில் உள்ள மூன்று முனை சந்திப்பில் சாலையோரம் 3 அடி ஆழத்தில் இருந்த பள்ளத்தை அப்படியே விட்டு விட்டு சாலைப்பணியை முடித்துள்ளனர். இதனால்தான் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே, சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story