‘டிரோன் கேமரா’ மூலம் விளைநிலங்களை அளவீடு செய்ய வேண்டும்


‘டிரோன் கேமரா’ மூலம் விளைநிலங்களை அளவீடு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 25 March 2022 10:07 PM IST (Updated: 25 March 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில், ‘டிரோன் கேமரா’ மூலம் விளைநிலங்களை அளவீடு வேண்டும் என்று கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்: 


குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று காலை 10.30 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலை 11.30 மணி வரை கூட்டம் தொடங்கவில்லை. அதிகாரிகளும் வரவில்லை. இதனால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேற முயன்றனர்.

அப்போது கூட்ட அரங்குக்கு வந்த கலெக்டர் மற்றும் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்தினர். இதையடுத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கியது. அப்போது கூவனுாத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மயான பாதை, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அது தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கூடுதல் கொள்முதல் மையம்
அதன் பின்னர் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். அதாவது, ‛கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு கூடுதல் மையங்களை அரசு அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை கூடுதலாக வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் கால்நடைத்துறை சார்பில் கால்நடை பராமரிப்புக்கு மானியம் வழங்க வேண்டும். ‛டிரோன் கேமரா’ மூலம் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களை அளவீடு செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் விசாகன் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.

நலத்திட்ட உதவிகள்
இதையடுத்து 22 விவசாய குழுக்களுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை, துணை இயக்குனர் சுருளியப்பன், மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் காந்திநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொடைக்கானல் 
இதேபோல் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கோவில்பட்டி கிராமத்திலிருந்து பாரதி அண்ணா நகர் வழியாக பேத்துப்பாறை கிராமத்துக்கு தார்சாலை அமைக்க வேண்டும். வனப்பகுதியில் உள்ள குளங்களை பொதுப்பணித்துறையினர் பராமரிக்க வேண்டும், பாசன வாய்க்கால்களை தூர்வாரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு கொடுத்தனர். 
கூட்டத்தில் தாசில்தார் முத்துராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டியராஜன், வனவர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Next Story