சான்றிதழில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


சான்றிதழில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்த  தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 March 2022 10:09 PM IST (Updated: 25 March 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி:
மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியை 
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டிைய அடுத்த சோபனூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 56). இவர் கடந்த, 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் காவேரிப்பட்டணம் அடுத்த சாத்தனூர் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
பிறகு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று திம்மேநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றினார். இவர் பணிப்பதிவேட்டில், 10, பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப்பயிற்சி சான்றிதழ்களை முன்னிலைபடுத்தி பதிவு செய்ய பலமுறை அறிவுறுத்தியும் இவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியையின் மதிப்பெண் சான்றிதழ்களை சரி பார்த்தனர். அப்போது அவர் சான்றிதழ்களில் திருத்தம் செய்தது தெரியவந்தது.
தற்காலிக பணியிடை நீக்கம்
இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு தேர்வுகள் இயக்குனர் ராகினி காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் சபிக்ஜானுக்கு, சுமதி, 10-ம் வகுப்பு சான்றிதழ் நகலில் போலியாக திருத்தம் செய்து பணியில் சேர்ந்து உள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யுமாறும் கடந்த 10-ந் தேதி கடிதம் அனுப்பினார். இதையடுத்து  வட்டாரக்கல்வி அலுவலர் சபிக்ஜான், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடிக்கு கடந்த 14-ந் தேதி கடிதமாக அனுப்பினார். 
இந்த நிலையில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய சுமதி உரிய விளக்கம் அளிக்காமலும், கடந்த பிப்ரவரி 3-ந் தேதி முதல் தொடர் மருத்துவ விடுப்பும் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, தலைமை ஆசிரியை சுமதியை தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார். 
நடவடிக்கை
மேலும், 31 ஆண்டுகளாக போலி ஆவணத்தை சமர்பித்து அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய சுமதி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story