மழையால் உளுந்து, பயறு வகை பயிர்கள் பாதிப்பு
கொரடாச்சேரி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு வகை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கொரடாச்சேரி, மார்ச்.26-
கொரடாச்சேரி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு வகை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறை
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தண்ணீர் பற்றாக்குறையால் 3 போகம் சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் தேவை உள்ள பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவு தண்ணீரில் சாகுபடி செய்யக்கூடிய பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
உளுந்து, பயறு சாகுபடி
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உளுந்து, பயறு வகை சாகுபடி 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உளுந்து, பயறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரடாச்சரி பகுதியில் நெல் அறுவடை முடிந்த பின்னர் விவசாயிகள் தங்களுடைய வயல்களில் பச்சைப்பயறு, உளுந்து தெளித்தனர். அப்போது மழை பெய்த நிலையில் தெளித்த விதைகள் பெருமளவு சேதம் அடைந்தன. அந்த மழையில் தப்பி பிழைத்த பச்சைப்பயறு மற்றும் உளுந்து பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
2 ஆயிரம் ஏக்கர்
குறிப்பாக கொரடாச்சேரி ஒன்றியத்தில் அம்மையப்பன், அரசவனங்காடு, வடகண்டம் உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் பச்சைப் பயறு மற்றும் உளுந்து வகை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பயிர்களின் இலைகள் பழுக்க தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நெல் சாகுபடிக்கு பின்னர் உளுந்து, பயறு வகைகள் எங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவிகரமாக உள்ளது. இந்த ஆண்டில் சாகுபடி தொடங்கும்போதே மழை பெய்ததால் தெளித்த விதைகள் பரவலாக முளைக்காத நிலை இருந்தது. அதில் தப்பி பிழைத்த உளுந்து, பயறு வகை செடிகள் தற்போது பெய்து வரும் மழையில் சிக்கி சேதம் அடைந்து வருகின்றன.
நிவாரணம்
குறிப்பாக இலைகள் பழுக்க தொடங்கி உள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு வகை பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story