நகராட்சி ஊழியர்களுடன் பா.ம.க. பிரமுகர் வாக்குவாதம்
திண்டிவனத்தில் வரி வசூலில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்களுடன் பா.ம.க. பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் நகரில் குடிநீர், வீட்டு வரி, தொழில் வரியை வசூல் செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று திண்டிவனம் பூதேரியை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ரவியின் வீட்டிலும் வரி வசூலிக்க நகராட்சி ஊழியர்கள் சென்றனர். அங்கிருந்த ரவியின் தந்தை முனுசாமியிடம் வரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே வெளியே சென்றிருந்த ரவி வீட்டுக்கு வந்து, நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது முற்றி அவர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புகார் வாபஸ்
இது தொடர்பாக நகராட்சி ஊழியர்கள், திண்டிவனம் போலீசில் புகார் கொடுத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பா.ம.க.வினர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நகராட்சி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியான ரூ.44 ஆயிரத்தை ரவி செலுத்தினார். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள், போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றனர்.
Related Tags :
Next Story