சேந்தமங்கலம் அருகே பரபரப்பு: காதல் தகராறில் டிப்ளமோ என்ஜினீயர் கொலை?-ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
சேந்தமங்கலம் அருகே காதல் தகராறில் டிப்ளமோ என்ஜினீயர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேந்தமங்கலம்:
டிப்ளமோ என்ஜினீயர்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி அண்ணாநகரை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகன் விஜய் (வயது 22). டிப்ளமோ என்ஜினீயரான இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.
விஜய் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய், தனது குடும்பத்துடன் சென்று அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டார். அப்போது இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெண் தர மறுத்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் பிணம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஜய் திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று காலை அண்ணாநகரை அடுத்த தண்டவாள பகுதியில் ஒரு வாலிபரின் பிணம் கிடப்பதாக விஜயின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது விஜய் அங்கு பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். விஜய் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டதாக தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அவரின் உறவினர்கள், பொதுமக்கள் புதன்சந்தை-சேந்தமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காதல் விவகாரத்தில் கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயின் உறவினர்கள், காதல் விவகாரத்தால் இளம்பெண்ணின் வீட்டார் அவரை வயிற்றை அறுத்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாகவும், கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
இதையடுத்து போலீசார் விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வழியாக சென்ற ரெயிலின் டிரைவர், விஜய் ரெயில் மோதுவதற்கு முன்பே தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததாக ரெயில் நிலையத்தில் கூறி சென்றது தெரியவந்தது.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து விஜயின் அக்காள் சவுந்தர்யா சேந்தமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலித்த பெண் கிடைக்காததால் விஜய் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரத்தால் அவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மின்னாம்பள்ளியில் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்குள்ள நடுநிலைப்பள்ளிக்கு நேற்று குறைந்த அளவிலான மாணவர்களே சென்றனர். பின்னர் ஆசிரியர்கள் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சேந்தமங்கலம் அருகே காதல் விவகாரத்தில் டிப்ளமோ என்ஜினீயர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story