சதுப்பேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம். கால அவகாசம் வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்


சதுப்பேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம். கால அவகாசம் வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 March 2022 11:14 PM IST (Updated: 25 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

சதுப்பேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்றது. வீடுகளை காலி செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

சதுப்பேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்றது. வீடுகளை காலி செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு

வேலூர் மாநகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சதுப்பேரி ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாயை ஆக்கிரமித்து கொணவட்டம் பகுதியில் ஏராளமானோர் வீடு கட்டியிருந்தனர். 110 அடி அகலம் கொண்ட கால்வாய் 25 அடியாக சுருங்கி போனது. அதனால் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. எனவே அப்பகுதி மக்கள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

 ஏரி கால்வாயை ஆக்கிரமித்து 150 பேர் வீடு, கட்டிடம் கட்டியிருந்தனர். அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், தங்களுக்கு மாற்று இடம் வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சேண்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அவர்களுக்கு ஒதுக்குவது தொடர்பாக வேலூர் உதவிகலெக்டர் பூங்கொடி தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

பொதுமக்கள் வாக்குவாதம்

இந்த நிலையில் வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் 2-வது நாளாக பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி  நடந்தது. அப்போது பொதுமக்கள் சிலர் வீடுகளை காலி செய்ய மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் ஏற்கனவே காலஅவகாசம் கொடுத்து விட்டோம். மீண்டும் 2 நாட்கள் தர முடியாது. 2 மணி நேரம் தருகிறோம். அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். அதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால் 2 நாட்கள் காலஅவகாசம் வழங்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து 2 மணிநேர இடைவெளிக்கு பின்னர் வேலூர் வடக்கு போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

Next Story