முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவரிடம் ரூ.35 லட்சம் மோசடி
முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் நிதி நிறுவனம்
குமரி மாவட்டம் பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை கைலாசவிளையை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 47), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஜெகதா கிறிஸ்டி. இவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாகவும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார். இவர்களின் உறவினர் பள்ளியாடியை சேர்ந்த சுஜான்சிங்.
இவர் மூலம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த மார்ட்டின் என்பவரின் அறிமுகம் சாம்ராஜிக்கு கிடைத்தது. மார்ட்டின் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஏஜெண்டாக உள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் இதன் கிளைகள் உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதங்களில் முதலீடு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மார்ட்டினும், சுஜான்சிங்கும் ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.
ரூ.35 லட்சம் மோசடி
மேலும் கோவையில் இருந்து நிதிநிறுவன உரிமையாளர்கள் ரமேஷ், அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வந்திருப்பதாக கூறி திக்கணங்கோட்டில் உள்ள மார்ட்டின் வீட்டுக்கு சாம்ராஜ், அவரது மனைவி ஜெகதா ஆகியோரை அழைத்து சென்றனர். அப்போது நிதி நிறுவனத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் ரூ.35 லட்சம் முதலீடு செய்தால், 10 மாதத்தில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என கூறி நம்ப வைத்தனர். இதையடுத்து மனைவியின் நகைகளை விற்று அதன் மூலம் ரூ.5 லட்சத்தை சாம்ராஜ் செலுத்தினார். இதையடுத்து பல தவணைகளாக ரூ.30 லட்சம் வரை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால் பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் அவர்கள் கூறிய படி பணத்தை கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக பலமுறை கேட்டும் எந்தவித பதிலும் சரியாக நிதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சாம்ராஜ் இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.
உடனே நிதிநிறுவன உரிமையாளர் ரமேஷ், அவரது தாயார் லட்சுமி மற்றும் மார்ட்டின், சுஜான்சிங் ஆகிய 4 பேர் மீது குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story