வெப்படை அருகே ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை: 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


வெப்படை அருகே ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை: 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 11:20 PM IST (Updated: 25 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

வெப்படை அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை 2-வது நாளாக வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம்:
வெப்படை அருகே உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ரிதுன் (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் ஆசிரியை திட்டியதால் ரிதுன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் ஈரோடு ரெயில்வே போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் மாணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்து நேற்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனிடையே தண்ணீர்பந்தல் பாளையம் அரசு பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் விஜயா நேரில் சென்று புகார் கூறப்படும் ஆசிரியை மற்றும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

Next Story