வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்


வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்
x
தினத்தந்தி 25 March 2022 11:26 PM IST (Updated: 25 March 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

பி.எம். கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது கட்டாயம் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

கடலூர், 

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங் களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கவும், இதர வேளாண் பணிகளுக்காகவும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 82 ஆயிரத்து 811 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2 ஆயிரம் வீதம் 10 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது விவசாயிகள் வருகிற ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரையுள்ள காலத்திற்கான 11-வது தவணைத் தொகையை பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும்.

கட்டாயம்

மத்திய அரசு தற்போது பி.எம்.கிசான் திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை விவசாயியின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில், இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும்.

தற்போது விவசாயிகள் 11-வது தவணைத் தொகை (1.4.2022 முதல் 31.7.2022 வரை) பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது கட்டாயமாகும். கடலூர் மாவட்டத்தில் இது வரை 24 ஆயிரத்து 958 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு எண்ணோடு இணைக்கவில்லை என வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சேவை மையம்

ஆகவே விவசாயிகள் உடனடியாக தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் சென்று வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இதுவரை ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ-பொது சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்கள் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களை பார்த்து உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கான செலவின கட்டணமாக ரூ.15 மட்டுமே இ-பொது சேவை மையங்களால் வசூலிக்கப்படும்.

மே மாதத்திற்குள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதார் எண்கள் மற்றும் வங்கிக்கணக்குகளை அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வங்கிகளுக்கு நேரில் சென்று வருகிற மே மாத இறுதிக்குள் பதிவு செய்து தொடர்ந்து இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story