முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்
x
தினத்தந்தி 25 March 2022 11:37 PM IST (Updated: 25 March 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குடமுழுக்கை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கடையூர்:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குடமுழுக்கை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், அபிராமி பட்டர்க்காக அமாவாசை பவுர்ணமியாக்கிய அபிராமி அம்மன் திருவிளையாடல் புரிந்த சிறப்பு பெற்ற தலமாகும். மேலும் 3 ராஜ கோபுரங்கள் கொண்ட கோவிலில் குடமுழுக்கு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 23-ந் தேதி தொடங்கி தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி  வழங்கினார்.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை 5 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி, 6 மணியளவில் பரிவார யாகசாலை, பூர்ணாகுதி தீபாராதனை, 8-ம் காலம் யாகசாலை பூஜை செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடு நடைபெறும். வேத விற்பன்னர்கள், ஓதுவார்கள் மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு 10.30 மணிக்கு விமானம், ராஜகோபுரத்தில் மகாகுடமுழுக்கு நடைபெறும். அதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம் நடைப்பெற்று 7.30 மணிக்கு திருகல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து பாலாம்பிகை உடனாகிய காலசம்ஹார மூர்த்தி, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா காட்சிகள் நடைபெறும்.
பாதுகாப்பு பணியில் போலீசார்
இந்த குடமுழுக்கிற்கு தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள், கட்டளை தம்பிரான்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். குடமுழுக்கில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குடமுழுக்கை முன்னிட்டு திருக்கடையூர் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Next Story