பட்டாசு ஆலை வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு


பட்டாசு ஆலை வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 26 March 2022 12:05 AM IST (Updated: 26 March 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலை வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

தாயில்பட்டி, 
சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக்கோரியும், சரவெடி தயாரிக்க அனுமதி கோரியும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 21-ந் தேதி முதல் 300 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக நேற்று கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரெங்கநாதன் தலைமையில் பட்டாசு உரிமையாளர்கள், வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தை கைவிடுமாறும், பட்டாசு ஆலைகளை திறக்குமாறும் அதிகாரிகள் கேட்டு கொண்டனர். இதையடுத்து பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தை கைவிட்டு ஆலோசனை கூட்டத்தை அறிவித்தனர். அந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் காத்தலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் ஜெயப்பிரகாஷ், பட்டாசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பட்டாசு ஆலைகளில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
பின்னர் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சட்ட விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். தொழிலாளர்கள் கைத்தறி ஆடை அணிய வேண்டும். மருந்து கலவை பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. பீடி, சிகரெட், மது பயன்படுத்தக் கூடாது என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story