பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததால் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை முற்றுகை
பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததால் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி,
மர்ம சாவு
அரவக்குறிச்சி அருகே ராஜபுரத்தை சேர்ந்தவர் வாசு (வயது 41). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய போதிய வசதி இல்லை எனக்கூறி கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வாசுவின் உடலை கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்கள் போராட்டம்
இதனால் அதிருப்தி அடைந்த வாசுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையின் நுழைவு பகுதியை முற்றுகையிட்டு சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் வாசுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story