கரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கரூர்,
மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன்படி உப்பிடமங்கலம் கிழக்கு கிராமம் ஓடை புறம்போக்கில் 37 சென்ட் நிலத்தில் வேலி அடைத்தும், உழவடை செய்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளில் அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. மேலும் திருமாநிலையூர் மற்றும் தாந்தோணி கிராமங்களில் அமராவதி ஆற்றின் வலது கரை வாய்க்காலில் 1.75 ஏக்கர் நிலத்தில் சாயப்பட்டறை சுற்றுச்சுவர், செங்கல் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பு, மாட்டு கொட்டகை மற்றும் வேலி வைத்து அடைத்து செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் கரூர் ஆர்.டி.ஓ. பாலசுப்பிரமணியன் தலைமையில், கரூர் தாசில்தார் பன்னீர்செல்வம், மண்டல துணை தாசில்தார் சுதா மற்றும் அமராவதி உதவி பொறியாளர் ராஜகோபால், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நஞ்சை புகழூர் கிராமம் தவுட்டுப்பாளையம், கட்டி பாளையம் பகுதிகளில் காவிரி ஆற்றுப்புறம்போக்கு நிலத்தில் அப்பகுதிகளை சேர்ந்த சிலர் மாட்டுத்தொழுவம் மற்றும் தடுப்பு வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதேபோல் பிள்ளாபாளையத்தில் வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை கம்பிவேலி போட்டு அடைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. தென்னிலை கீழ்பாகம் கிராமத்தில் வாரி புறம்போக்கு நிலம் கிரஷர் மண்ணால் அடைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மேலும், சுடுகாட்டு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இதனை புகழூர் தாசில்தார் மதிவாணன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
Related Tags :
Next Story