கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்


கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி  மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 March 2022 12:51 AM IST (Updated: 26 March 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விராலிமலை
விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து அளுந்தூர், நாகமங்கலம், நாசரேத் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்களில் சென்று வருகின்றனர். அவர்கள் விராலிமலை சோதனைச்சாவடிக்கு வந்து அங்கிருந்து திருச்சி செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறுகின்றனர்.
வழக்கம்போல நேற்றும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்சில் ஏறியபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் சில மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனைக்கண்ட பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் படியில் நின்று பயணம் செய்தால் பஸ்சை இயக்க மாட்டோம் என கூறி பஸ்சை நிறுத்தியுள்ளனர்.
சாலை மறியல்
 அந்த பஸ்சை விட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி-கல்லூரிக்கு செல்ல முடியாது என்பதால் மாணவர்கள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலையில் அமர்ந்து பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் மற்ற வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் மாணவர்கள் அனைவரும் அதே பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்றனர்.

Next Story