2½ டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
சிவகாசி அருகே 2½ டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
சிவகாசி அருகே 2½ டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்பின் பிரைட்மேரி தலைமையில் போலீசார் திருத்தங்கல் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருத்தங்கல் தேவர் சிலை அருகே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 45 கிலோ உள்ள 25 மூடை ரேஷன் அரிசி இருந்தது. இதில் மொத்தம் 1,125 கிலோ ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த உரிமையாளர் திருத்தங்கல்லை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 25) என்பதும், அவர் இந்த ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும் அவரிடம் இருந்து இந்த ரேஷன் அரிசி மூடைகளை சிவகாசி அருகே உள்ள பிச்சுபட்டியைச் சேர்ந்த மாரிக்காளை கொள்முதல் செய்ய இருந்தார் என்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் ராஜேஸ்வரன் மற்றும் மாரிக்காளை ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரனை கைது செய்தனர் மாரிக்காளையை தேடி வருகின்றனர்.
மேலும் சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் உள்ள லிங்காபுரம் காலனியை சேர்ந்த முருகன் (58) என்பவர் 30 மூடை ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து உள்ளார் என ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். 30 மூடைகளில் 1,350 கிலோ ரேஷன்அரிசி இருந்தது.
இந்த ரேஷன் அரிசியையும், பிச்சுபட்டியைச் சேர்ந்த மகாதேவன் கொள்முதல் செய்ய இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதன் பேரில் உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முருகன் மற்றும் மகாதேவன்ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். மகாதேவனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story