பேராவூரணி காட்டாற்று பாலத்தின் சாலையை சீரமைக்க வேண்டும்


பேராவூரணி காட்டாற்று பாலத்தின் சாலையை சீரமைக்க வேண்டும்
x

குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேராவூரணி காட்டாற்று பாலத்தின் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி:
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேராவூரணி காட்டாற்று பாலத்தின் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
காட்டாற்று பாலம் 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி மூன்று புறமும் காட்டாறுகளால் சூழப்பட்டுள்ளது. அறந்தாங்கி சாலையில் சித்தாதிக்காடு தரைப்பாலம், சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை செல்லும் பூக்கொல்லை காட்டாற்று பாலம், பட்டுக்கோட்டை சாலையில் செல்வவிநாயகபுரம் காட்டாற்று பாலம் என மூன்று மார்க்கத்திலும் காட்டாறுகள் உள்ளன. புதுக்கோட்டை சாலையில் மட்டுமே காட்டாறுகள் பாலம் கிடையாது. 
உயரமான பாலம் அமைக்க கோரிக்கை 
80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3 பாலங்களையும் இடித்து விட்டு போக்குவரத்து தடைபடாமல் உயரமான பாலமாக அமைத்து தர வேண்டும் என பேராவூரணி பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செல்வவிநாயகபுரம் காட்டாற்று பாலத்தில் தண்ணீர் ெபருக்கெடுத்து ஓடியது. மேலும் பாலத்தின் ஒருபகுதியில் விரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். 
குண்டும், குழியுமான சாலை 
தற்போது காட்டாறு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகி்ன்றனர். பாலம் குறுகலாக உள்ளதால் எதிரே வரும் பெரிய வாகனங்களுக்கு இடம் விட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைக்கின்றனர். பாலத்தின் இருபுறமும் தண்ணீர் ஓடுவதால் விபத்து ஏற்படும் போது வாகன ஓட்டிகளுக்கு   உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேராவூரணி காட்டாற்று பாலத்தின் தார்ச்சாலையை சீரமைத்து தர ேவண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story