நகைக்கடையில் 6½ பவுன் திருட்டு


நகைக்கடையில் 6½ பவுன் திருட்டு
x
தினத்தந்தி 26 March 2022 1:39 AM IST (Updated: 26 March 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நகைக்கடையில் 6½ பவுனை திருடி சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் நகைக்கடையில் 6½ பவுனை திருடி சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைக்கடையில் பூட்டு உடைப்பு
தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் வசித்து வருபவர் கமல்சந்த் ஜெயின். இவர் தனது வீட்டின் முன்பாக நகைக்கடையை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு நகைக்கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார். நேற்றுகாலை கடையை திறப்பதற்காக வந்தபோது நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த கமல்சந்த் ஜெயின் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திருட்டு
மேலும் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கடையில் இருந்து நகைகளை திருடி கொண்டு கடையை விட்டு வெளியே வருவதும், பின்னர் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு செல்வதும் தெரியவந்தது.
நகைகள் எவ்வளவு திருட்டு போனது என போலீசார் விசாரணை நடத்தியபோது, 6½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. மேலும் தஞ்சை காந்திஜிசாலையில் இவருக்கு சொந்தமான நகைக்கடைக்கும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் கமல்சந்த் ஜெயின் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story