செந்துறையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


செந்துறையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 March 2022 2:47 AM IST (Updated: 26 March 2022 2:47 AM IST)
t-max-icont-min-icon

செந்துறையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

செந்துறை:

40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரை மற்றும் வரத்து வாய்க்கால்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதனை அகற்ற பொதுப்பணித்துறையினர் பல ஆண்டுகளாக முயன்று வந்தனர். மேலும் அங்கு வசிப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக அவகாசம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. அதன்படி செந்துறை தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செந்துறை தாசில்தார் குமரய்யா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுத்தனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்புகள் உறுதியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் தாங்களாகவே ஏரிக்கரை பகுதியில் அமைத்திருந்த கட்டிடங்கள், தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் கொட்டகைகளை நேற்று முன்தினம் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் பாதுகாப்பின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற செந்துறை தாசில்தார் குமரய்யா தலைமையில் தாலுகாவில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் படைசூழ அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அப்போது தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிய குடியிருப்புவாசிகளுக்கு அவகாசம் கொடுத்தனர்.
அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத சினிமா தியேட்டரின் சுற்றுச்சுவர் மற்றும் ஜெனரேட்டர் கட்டிடத்தை அதிரடியாக இடித்தனர். அதேபோல் அரசியல் பிரமுகர் கலியமூர்த்தி என்பவர் ஏரியை ஆக்கிரமித்து கட்டி இருந்த டாஸ்மாக் மதுபான கூடத்தையும்(பார்) இடித்து அகற்றினர். இதனைக் கண்ட மற்ற ஆக்கிரமிப்பாளர்கள் அவசர அவசரமாக தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தகராறு
இந்த நிலையில் மரம் இழைப்பகம் நடத்தி வந்த ராமலிங்கம் மற்றும் அவரது மகன்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் சிலர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தியிடம் தகராறு செய்ததோடு, பொக்லைன் எந்திரத்தையும் உடைக்க முயன்றனர். அதன் பின்னர் தாசில்தாரிடமும் சென்று தகராறு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் அப்பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருந்த மகாலிங்கம் உள்ளிட்ட பலர் தங்களது உடைமைகளை வைக்க வேறு இடமின்றி  சாலை ஓரங்களில் வைத்து கொண்டு பறிதவித்தனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
40 ஆண்டுகால நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பாரபட்சமின்றி அதிரடியாக அகற்றிய சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றது. இதேபோல மற்ற இடங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story