பள்ளி நேரத்தில் பஸ்கள் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்


பள்ளி நேரத்தில் பஸ்கள் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 March 2022 2:51 AM IST (Updated: 26 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி நேரத்தில் பஸ்கள் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடையார்பாளையம்:

பள்ளிக்கு வருவதில் தாமதம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளிக்கு சுத்தமல்லியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள் தோறும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்.
இந்நிலையில் காலை நேரத்தில் பள்ளிக்கு வருவதற்கு சரியான முறையில் அரசு பஸ்கள் வருவதில்லை. இதனால் பள்ளிக்கு வருவதில் தாமதம் ஆகிறது. எனவே பொதுத்தேர்வுக்காக கூடுதலாக நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே போல் மாலையில் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்வதற்கு பஸ்கள் இல்லை. பள்ளி விடுவதற்கு முன்பாகவே பஸ்கள் சென்று விடுகின்றன. இதனால் வீட்டிற்கு செல்வதற்கு இரவு 8 மணி ஆகிறது என்று மாணவ, மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சாலை மறியல்
மேலும் இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று மாலை சுத்தமல்லியில் பள்ளி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீசார், மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கூறி கூடுதல் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் சுத்தமல்லி வழியாக கும்பகோணம்- அரியலூர் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story