ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்


ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 2:51 AM IST (Updated: 26 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் துணை திட்டத்தின் கீழ் பல்வேறு செயலாக்க துறைகள் மூலம் திட்டங்களின் செயல்பாட்டை மாவட்ட அளவில் அலுவலர்களை கொண்டு கண்காணிக்க குழு நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட குழுவினர் அரியலூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்தனர். இந்த கண்காணிப்பு குழுவினர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கண்காணிப்பு குழுவினர் பல்வேறு அரசு துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள், செலவு செய்யப்பட்ட விவரம், பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையாக அளிக்க உள்ளார்கள். கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்ய வரும்போது ஒவ்வொரு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் உடன் செல்வதுடன், சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிப்பு குழுவிடம் தகவல்களை உரிய முறையில் வழங்கி, ஆய்வுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும், என்றார்.
இதில், ஆதிதிராவிடர் நலத்துறை இணை ஆணையர் கருணாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மகளிர் திட்ட இயக்குனர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story