கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
தாமரைக்குளம்:
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
இதில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க தர்மராஜன் பேசுகையில், அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டத்திற்கு கடந்த ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டு, ரூ.23 லட்சம் ஒதுக்கீடு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் கைவிடப்படும் என்று திடீரென அறிவித்ததை வண்மையாக கண்டிக்கிறோம். மேலும் இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு விவசாயிகளின் வாழ்வும் உயரும். எனவே தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்து திட்டத்தை தொடங்க வேண்டும். கோடை காலம் தொடங்கி விட்டதால் விவசாயிகள் மண் வளத்தை உயத்த வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், என்றார்.
கடன் தள்ளுபடி
சாத்தமங்கலம் பெண் விவசாயி கண்ணகி பேசுகையில், சாத்தமங்கலத்தில் சர்க்கரை தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீரால், ஆறு ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் அழிந்து விட்டன. இது குறித்து விசாரித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். சின்ன வளையத்தை சேர்ந்த விவசாயி மகாராஜன் பேசுகையில், மான், மயில் மற்றும் வன விலங்களுக்காக வனத்தில் நீர்நிலைகள் அமைக்க வழிவகை செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கியில் தகுதியான அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சின்னவளையம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும். விவசாயி கலைச்செழியன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பயிர் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. மூந்திரிக்கு காப்பீடு, ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. எனவே தமிழக அரசு முந்திரி பயிரை காக்க வேண்டும், என்றார். விவசாயி பாலகிருஷ்ணன் பேசுகையில், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சுக்கிரன் ஏரி, வரத்து வாய்க்கால்களை தூர் வார வேண்டும். ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தில் குறைந்த அழுத்த மின்பிரச்சினையை தீர்க்க வேண்டும், என்றார்.
உழவு பணி
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடன் வழங்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் விவசாய கருவிகளை ஏற்கனவே வழங்கிய விவசாயிகளுக்கு வழங்காமல், புதிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பொறியியல் துறை மூலமாக வாடகை மையம் உள்ள இடத்தை ஆய்வு செய்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு உழவு பணி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகள் பதில் அளித்தனர்.
Related Tags :
Next Story