குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
பெரம்பலூர்:
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வெளியே சென்றிருந்ததால், கூட்டம் முதலில் வேளாண்மை துறை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஒவ்வொரு அரசு துறைகள் சார்பாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவுரைகள் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
கூட்டத்தை புறக்கணித்து தர்ணா
அப்போது விவசாயிகள் சிலர் திடீரென்று எழுந்து, மாதத்தில் ஒருநாள் நடக்கும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிக நேரம் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் விவசாயிகள் பேசுவதற்கு நேரம் குறைவாக ஒதுக்கப்படுகிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் எப்போதும் தாமதமாகவே வந்து கலந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் பெரும்பாலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலம் கடந்து வருகிறார்
இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு காலம் கடந்து கலெக்டர் வருவது விவசாயிகளை அவமதிக்கும் செயலாகும். விவசாயிகள் கூறும் குறைகளை கூட்டத்தில் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் வகுப்பு எடுக்கப்படுகிறது. 30 நாள் பிரச்சினையை கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்க முடியவில்லை. கலெக்டரோ எங்களை புறக்கணிக்கிறார்.
நாட்டிற்கு சோறு போடும் விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மறுப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்ட தமிழக அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அப்போது தான் அரசின் திட்டங்கள் விவசாயிகளிடம் முழுமையாக சென்றடையும், என்றார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லதுரை கூறுகையில், தொடர்ந்து கலெக்டர், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை அவமதிப்பாக நடத்துகிறார். கூட்டத்திற்கு பாதியில் வருவதும், கூட்டம் முடியும் வரை இருக்காமல், முழுமையாக நடத்தாமல் அலட்சியப்படுத்துகிறார் என்ற கோபத்தில் தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் தொடர்ந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தங்களது வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் அதன்பிறகு குறைந்த அளவு விவசாயிகளுடன் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story