கட்டையால் தாக்கி பெண்ணை கொலை செய்தது அம்பலம்; கணவர் உள்பட 4 பேர் கைது
கட்டையால் தாக்கி பெண்ணை கொலை செய்தது அம்பலம்; கணவர் உள்பட 4 பேர் கைது
திருமங்கலம், மார்ச்.26-
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கட்டதேவன்பட்டியை சேர்ந்தவர் தங்கராமன்(வயது 52). இவருடைய மனைவி பஞ்சம்மாள் (வயது 46). இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டில் மாடு முட்டி கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் பஞ்சம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் பஞ்சம்மாள் உடலில் காயங்கள் சந்தேகப்படும்படி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார், தங்கராமனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தங்கராமன், அவரது சகோதரர் பாண்டி ஆகிய இருவருக்கும் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதனை பங்கிடுவதில் இருவருக்கும் பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி தங்கராமன், அவரது மனைவி இருவரும் தோட்டத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர். அங்கு வந்த பாண்டி தனது பங்குத் தொகையை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பஞ்சம்மாள் தலையிட்டு பாண்டியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமுற்ற பாண்டி அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து பஞ்சம்மாள் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து தங்கராமன், தனது மகன்களான ராஜபாண்டி(26), முத்துராமன்(24) ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். மனைவியை தாக்கியது தனது சகோதரர் என்பதால் பின்னாளில் பிரச்சினை என நினைத்து மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என அவர்களுக்குள் பேசி முடிவு செய்தனர். இதனையடுத்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்ததும் தெரியவந்தது.
பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே கொலையை மறைத்து மாடு முட்டியதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர். மேலும் கொலையை மறைத்ததற்காக தங்க ராமன், அவரது மகன்கள் ராஜபாண்டி, முத்துராமன் ஆகியோரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story