ஜெயராஜ்-பென்னிக்சை படுகாயங்களுடன் சாத்தான்குளம் போலீசார் அழைத்து வந்தனர்-சிறைக்காவலர் சாட்சியம்
சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை-மகனை கோவில்பட்டி சிறைக்கு படுகாயங்களுடன் போலீசார் அழைத்து வந்தனர் என, அன்றைய தினம் அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர் சாட்சியம் அளித்தார்.
மதுரை
சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை-மகனை கோவில்பட்டி சிறைக்கு படுகாயங்களுடன் போலீசார் அழைத்து வந்தனர் என, அன்றைய தினம் அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர் சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளம் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் அழைத்து சென்றனர். சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ்நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கை மதுரை மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி பத்மநாபன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோவில்பட்டி கிளை சிறைக்காவலர் மாரிமுத்து ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது, கைதாகி உள்ள போலீசார் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி, பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கு வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் ஆஜராக உள்ளார் என தெரிகிறது.
அடையாளம் காட்டினார்
சிறை போலீஸ்காரர் மாரிமுத்து சாட்சியம் அளித்த போது, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வரும்போதே படுகாயங்களுடன்தான் வந்தனர். தற்போது இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லதுரை ஆகியோர்தான் தந்தை-மகனை அழைத்து வந்தனர். காயங்களுடன் அவர்கள் இருந்ததால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களிடமும் எழுத்து மூலமாக தகவல்களை பெற்றுக்கொண்ட பின்புதான் ஜெயராஜையும், பென்னிக்சையும் சிறைக்குள் அனுமதித்தோம். கோவில்பட்டி சிறையில் காயங்களுடன் அவதிப்பட்ட பென்னிக்சை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும் போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லதுரை ஆகியோர்தான் அழைத்துச்சென்றனர் என்று என்று சாட்சியம் அளித்ததுடன், அந்த 2 போலீஸ்காரர்களை நீதிபதியிடம் சிறைக்காவலர் மாரிமுத்து அடையாளம் காட்டியதாகவும் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story