மேகதாது திட்டம்: தமிழக அரசுக்கு எதிரான தீர்மானம் கர்நாடக மேல்-சபையிலும் நிறைவேற்றம்
மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக சட்டபையில் கொண்டுவரப்பட்ட தமிழக அரசுக்கு எதிரான தீர்மானம் கர்நாடக மேல்-சபையிலும் நிறைவேறியது
பெங்களூரு: மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக சட்டபையில் கொண்டுவரப்பட்ட தமிழக அரசுக்கு எதிரான தீர்மானம் கர்நாடக மேல்-சபையிலும் நிறைவேறியது.
கண்டன தீர்மானம்
தமிழக அரசு, சட்டசபையில் கடந்த 21-ந் தேதி மேகதாது திட்டத்திற்கு எதிராக அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கர்நாடக சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்மானம் நேற்று கர்நாடக மேல்-சபையிலும் கொண்டு வரப்பட்டது. சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி அந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அதே தீர்மானம், எந்தவிதமான திருத்தமும் இன்றி தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்துக்கட்சிகள் ஆதரவு
அதில், ‘மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மத்திய நீர் ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும், தமிழக அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீது ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மரிதிப்பேகவுடா பேச அனுமதி கேட்டார். அதற்கு மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அனுமதி நிராகரித்தார். எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறினார். ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆதரவு அளித்தது. இதையடுத்து அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story