மல்லூரில் பரபரப்பு சம்பவம்: ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி-4 மணி நேரத்தில் வாலிபர் அதிரடி கைது


மல்லூரில் பரபரப்பு சம்பவம்: ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி-4 மணி நேரத்தில் வாலிபர் அதிரடி கைது
x
தினத்தந்தி 26 March 2022 4:15 AM IST (Updated: 26 March 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

மல்லூரில் ஏ.டி.எம். மைய எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் 4 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பனமரத்துப்பட்டி:
மல்லூரில் ஏ.டி.எம். மைய எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் 4 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஏ.டி.எம். மையம்
சேலம் மாவட்டம் மல்லூரில் உள்ள சேலம்- நாமக்கல் நெடுஞ்சாலையில் பி.மேட்டூர் பிரிவு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளிகள் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். பின்னர் அவர் உள்ளே நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றார். ஆனால் அதனை உடைக்க முடியாததால் அங்கிருந்த பொருட்கள் மற்றும் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். 
மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை மட்டும் உடைத்து எடுத்து சென்றார். எந்திரத்தை உடைக்க முயன்றதால் இதுகுறித்து மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தகவல் சென்றது. இதையடுத்து அவர்கள் இதுகுறித்து மல்லூர் போலீசாருக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
கைது
மேலும் சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று கேமராக்களை உடைப்பதற்கு முன் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணைக்கு காலை 6.30 மணிக்கு பலன் கிடைத்தது. அதாவது சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் கூலித்தொழிலாளி தமிழரசன் (வயது 26) என்பவரை கைது செய்தனர். 
தனிப்படை போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கூலி வேலை செய்து போதிய வருமானம் இல்லாததாலும், தினம் மது குடிக்க பணம் இல்லாததாலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தால் அதில் நிறைய பணம் இருக்கும் என்று நினைத்து உடைத்ததாக கூறினார். மல்லூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மல்லூர் அருகே நிலவாரப்பட்டியில் கடந்த 16-ந் தேதி இரவு சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய எந்திரத்தை பனமரத்துப்பட்டி பெரமனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 நாட்களில் 2-வது முறையாக மல்லூர் பகுதியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story