நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து விவசாயிகள் திடீர் போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள், கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள், கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். இதேபோல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என நினைத்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
திடீர் வாக்குவாதம்
விஜயநாராயணம் பெரியகுளம் விவசாயிகளும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் விவசாயிகளை, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது விவசாயிகள் தரப்பில், தாங்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் உள்ளே சென்று அதிகாரிகளிடம் விசாரித்து, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் சமாதானம் அடைந்தனர்.
கால்வாயில் உடைப்பு
பின்னர் விஜயநாராயணம் பெரியகுளம் விவசாயிகள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-
நம்பியாறு பிரிவு விஜயன் கால்வாயில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் 100 மீட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு, கரையை தண்ணீர் அடித்து சென்று விட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த கால்வாய் மூலம் குளத்துக்கு தண்ணீர் வரவேண்டி இருப்பதால் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளனர்.
சேரன்மாதேவி அருகே உள்ள அத்தாளநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கஜேந்திரவரதன் தலைமையில் விவசாயிகள் மனு கொடுத்தனர். அதில், ‘‘அத்தாளநல்லூர் பஞ்சாயத்து ராஜகுத்தாலப்பேரி சீனியாபுரம் பகுதியில் 550 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதையொட்டி ராஜகுத்தாலப்பேரி சீனியாபுரத்தில் கடந்த 6 ஆண்டுகளாக அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இந்த ஆண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் நெல் மூட்டைகளை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் கொள்முதல் நிலையத்தை திறந்து உடனே விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story