வால்பாறையில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல்
வால்பாறையில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
வால்பாறை
வால்பாறையில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்
வால்பாறை வட்டார போக்குவரத்து பகுதி நேர அலுவலகம் சார்பில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் வால்பாறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் உரிய ஆவணங்கள் மற்றும் தகுதிச்சான்று (எப்.சி.) இல்லாமல் இயக்கப்பட்ட லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அந்த வாகனங்கள் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு ெகாண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- தகுதிச் சான்று (எப்.சி) பெறாத நிலையில் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து வால்பாறை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வாகன வரி கட்டாத வாகனங்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் வரி வசூலிக்கப்பட்டது. வால்பாறை பகுதியில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் சாலைகளில் வேகத்தடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உரிமம் ரத்து செய்யப்படும்
வால்பாறை அருகில் உள்ள ரொட்டிக்கடை பகுதியில் இருந்து லோயர்பாரளை எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வால்பாறை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் பேசப்பட்டது. சம்பந்தப்பட்ட எஸ்டேட் பகுதி மக்கள் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தால் உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறை பகுதியில் பல வாகனங்கள் உரிய தகுதிச்சான்று பெறாமல் இயக்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு தகுதி சான்று பெறாத வாகனங்கள், இன்சூரன்ஸ் கட்டாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இரவில் இயக்கப்படும் ஆட்டோக்களின் டிரைவர்கள் குடிபோதையில் இருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளது. இரவு ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன சோதனையில் குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புகை பரிசோதனை மையம்
வால்பாறை அரசு பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு அரசு பஸ்சிலும் மாற்று டயர், டயரை மாற்றுவதற்கான உபகரணங்கள் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் உள்ள வாகனங்கள் தகுதிச் சான்று பெறுவதற்கு வரும் போது புகை பரிசோதனை சான்று பெறவேண்டும். ஆனால் அதற்கான வசதி வால்பாறையில் இல்லை.
எனவே புகை பரிசோதனை மையம் வால்பாறையில் அமைக்க வேண்டும் என்று வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story