விதிமுறைகளை மீறி கட்டிய 99 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் - பூட்டி ‘சீல்’ வைக்க மாநகராட்சி நடவடிக்கை


விதிமுறைகளை மீறி கட்டிய 99 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் - பூட்டி ‘சீல்’ வைக்க மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2022 6:57 PM IST (Updated: 26 March 2022 6:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டிய 99 கட்டிடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி சீல் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிட அனுமதியானது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் செயற்பொறியாளர்கள் மூலமாகவும், 5 ஆயிரத்து 1 சதுர அடி முதல் 10 ஆயிரம் சதுர அடி வரை ரிப்பன் கட்டட தலைமையிடத்தில் உள்ள நகரமைப்பு பிரிவின் மூலமாகவும் அளிக்கப்படுகிறது. கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டிடங்களை கட்ட வேண்டும்.

அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை மூடி ‘சீல்’ வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும்.

இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களின் மூலம் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராயபுரம் மண்டலத்தில் கடந்த 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் 125 நபர்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மேலும் 99 கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 11 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டிடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ராயபுரம் 5-வது மண்டலத்திற்கு உட்பட்ட 54-வது வார்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் இயங்கி வரும் 3 கடை உரிமயாளர் வாடகை பாக்கி செலுத்தாததால் நேற்று உதவி வருவாய் அதிகாரி பாலச்சந்தர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் 3 கடைகளையும் மூடி சீல் வைத்தனர்.

Next Story