கள்ளக்காதலன் மூலம் பெற்ற 4 மாத குழந்தையை ரூ.1½ லட்சத்துக்கு விற்ற தாய் கைது
கள்ளக்காதலன் மூலம் பிறந்த 4 மாத குழந்தையை ரூ.1½ லட்சத்துக்கு விற்ற தாய், தரகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்,
சென்னை ராயபுரத்தை சேர்ந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் லலிதா மூலம் செம்பியம் போலீசாருக்கு ஆன்லைனில் புகார் மனு ஒன்று வந்தது.
அந்த மனுவில், பெரம்பூர் அடுத்த செம்பியம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்த உதயா (வயது 29) என்ற பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதம் சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தையை பணத்திற்காக அவர் விற்றதாகவும், இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த புகார் மனு குறித்து விசாரணை செய்வதற்காக செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உதயாவை கண்டுபிடித்து விசாரணை செய்தனர்.
அதில், உதயா தனது கணவர் மணிகண்டன் என்பவருடன் பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் வசித்து வந்ததாகவும், இவருக்கு 7 வயதில் மகன் உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது.
இந்த நிலையில், உதயாவுக்கு பாபு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்ததும், அந்த 4 மாத குழந்தையை உதயாவின் தோழியான ஆலந்தூரை சேர்ந்த ஜான்சிராணி (வயது 29) என்பவர் மூலம் ஈரோட்டில் வசித்து வரும் சவிதா (42) என்ற பெண்ணுக்கு விற்றதும் உறுதியானது.
சவீதாவுக்கு குழந்தை இல்லை என்பதால் உதயாவுக்கு பிறந்த குழந்தையை ரூ.1½ லட்சத்துக்கு வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படையினர் ஈரோடுக்கு விரைந்து சென்று அங்கிருந்த சவீதாவிடம் இருந்து ஆண் குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக பிறந்த குழந்தையை விற்றதாக தாய் உதயா மற்றும் தரகராக செயல்பட்ட ஜான்சிராணி மற்றும் சவீதா ஆகிய 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story