பொள்ளாச்சி அருகே அட்டகாச சிறுத்தை சிக்காததால் கூண்டை மாற்றி வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு


பொள்ளாச்சி அருகே அட்டகாச சிறுத்தை சிக்காததால் கூண்டை மாற்றி வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 March 2022 7:25 PM IST (Updated: 26 March 2022 7:25 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே அட்டகாச சிறுத்தை சிக்கவில்ைல. இதனால் கூண்டை மாற்றி வைத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.



பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அட்டகாச சிறுத்தை சிக்கவில்ைல. இதனால் கூண்டை மாற்றி வைத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

14 ஆடுகளை கடித்த சிறுத்தை

பொள்ளாச்சி அருகே ஆழியாறு ஒட்டக்கரடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 14 ஆடுகள் சிறுத்தை கடித்து இறந்தன. மேலும் தொடர்ந்து சிறுத்தை அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதை தொடர்ந்து தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்தனர். இதற்கிடையில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை முயலை கடித்து தூக்கி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி ஒட்டக்கரடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
கூண்டிற்குள் இறைச்சியை வைத்து, கூண்டினை செடி, கொடிகளை போட்டு மறைத்தனர். ஆனால் கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை. இதையடுத்து இறைச்சியை அகற்றி விட்டு, இரு கூண்டுகளிலும் ஆடுகளை கட்டி வைத்தனர். ஆனால் அதன்பிறகும் சிறுத்தை பிடிபடவில்லை. தற்போது கூண்டை மாற்றி வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் சிறுத்தை சிக்காததால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கூண்டு மாற்றி வைப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒட்டக்கரடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை பிடிபடவில்லை. இதனால் குழந்தைகளை வைத்துக் கொண்டு அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். தினமும் பயத்துடன் அந்த வழியாக வேலைக்கு சென்று வருகிறோம். எனவே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை கண்டறிந்து அங்கு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தையை பிடிக்க இரு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. கூண்டுகளில் ஆட்டை கட்டி வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை. இதன் காரணமாக ஏற்கனவே சிறுத்தை கேமராவில் சிக்கிய இடத்தில் கூண்டை மாற்றி வைத்து உள்ளோம். மேலும் தொடர்ந்து கூண்டு வைக்கப்பட்டு உள்ள பகுதியில் கண்காணித்து வருகின்றோம் என்றனர்.

Next Story