சென்னை போக்குவரத்து போலீசாருக்கு எல்.இ.டி. விளக்குடன் ஒளிரும் ‘ஜாக்கெட்’


சென்னை போக்குவரத்து போலீசாருக்கு எல்.இ.டி. விளக்குடன் ஒளிரும் ‘ஜாக்கெட்’
x
தினத்தந்தி 26 March 2022 7:29 PM IST (Updated: 26 March 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை போக்குவரத்து போலீசாருக்கு எல்.இ.டி. மின்விளக்கு ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகரில் வாகன போக்குவரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் எல்.இ.டி. சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் முக்கிய சிக்னல்களில் ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளிடம் சாலைவிதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசாரின் பாதுகாப்பிலும் தனிகவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் பொறுத்தக்கூடிய நவீன கேமராக்கள், ‘ரேடியம்’ பொருத்தப்பட்ட ‘ஜாக்கெட்’ போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இரவு நேரங்களில் சிக்னல் சந்திப்புகளில் பணியாற்றும் போலீசாருக்கு பேட்டரி உதவியுடன் சிவப்பு நிறத்தில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகளுடன் கூடிய ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக 500 போலீசாருக்கு இந்த ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அண்ணாசாலை, மெரினா, அண்ணாநகர், வேப்பேரி போன்ற முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் இரவு நேரங்களில் இந்த ஒளிரும் ஜாக்கெட்டை அணிந்தபடி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஒளிரும் ஜாக்கெட், வாகன ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்து போலீசார் இருக்கிறார். எனவே போக்குவரத்து விதியை முறையாக மதிக்க வேண்டும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை போலீசின் இந்த முயற்சி சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த கைக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி மாநகர போக்குவரத்து போலீசில் கடந்த ஆண்டே இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story