பயணிகளிடம் உள்ள பணம், நகை, செல்போன்களை குறிவைத்து இரவு நேர மின்சார ரெயில்களில் கத்தியுடன் திரியும் ஆசாமிகள்
போலீஸ் பாதுகாப்பு குறைபாட்டால் பயணிகளிடம் உள்ள பணம், நகை, செல்போன்களை குறிவைத்து, இரவு நேர மின்சார ரெயில்களில் கத்தியுடன் திரியும் ஆசாமிகளால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தின் தலைநகரமான இந்த தூங்கா நகரத்தில், சென்னை புறநகர் பகுதிகளுக்கு அதிகாலை 3.55 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தினமும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரம் பணி முடிந்து வீடு திரும்பும் மக்களுக்கு, மின்சார ரெயில் சேவையே அதிகம் கைகொடுக்கிறது. சென்னையில் கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான ரெயில் மார்க்கத்தில், கடைசியாக இரவு 11.59 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கும் மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில்களில் கூட்டம் குறைவாக இருந்தாலும், அதன் தேவை என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆனால், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ரெயில்வே போலீசாரோ, குறைவான கூட்டத்தை கருத்தில் கொண்டு, இந்த ரெயில்களை கண்டுகொள்வதில்லை.
போலீஸ் பாதுகாப்பு குறைபாடு, பயணிகள் எண்ணிக்கை குறைவு இரண்டையும் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு, பயணிகளிடம் உள்ள பணம், நகை, செல்போன்களை குறிவைத்து கத்தியுடன் திருடர்கள் இரவு நேர ரெயில்களில் பயமின்றி வலம் வரும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது.
இதுகுறித்த செய்தி கடந்த 16-ந்தேதி தினத்தந்தியில் செய்தியாக வெளியிடப்பட்டது. ஆனாலும், இதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவு கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 11.40 மணிக்கு புறப்பட்ட, கடைசி ரெயிலுக்கு முந்தைய ரெயிலில், குறைவான பயணிகளே பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரெயிலில் உள்ள 7-வது பெட்டியில் டிப்-டாப் ஆசாமி ஒருவர், வாசல் அருகே நின்று கொண்டு, ஆங்காங்கே இருந்த பயணிகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
அந்த ஆசாமியின் இடுப்பு பகுதியில் சொருகி வைத்திருந்த கத்தியின் கைப்பிடி வெளியே தெரிந்தது. இதை பின்புறம் இருந்து பார்த்த பயணி தனது செல்போனில் ரகசியமாக அந்த காட்சியை படம் பிடித்தார். அடுத்த ரெயில் நிலையத்தில், ரெயில் நின்றபோது அந்த பயணி ரெயிலைவிட்டு வேகமாக இறங்கி சென்று, கடைசி பெட்டியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசிடம் போய், தகவல் கூறினார். அடுத்து வந்த பரங்கிலை ரெயில் நிலையத்தில், ரெயில் நின்றபோது, அந்த ஆசாமியை பிடிப்பதற்காக அந்த போலீஸ்காரர் ஓடிவந்தார். சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமி ரெயிலைவிட்டு இறங்கி ஓடி இருளில் மறைந்துவிட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் தினமும் தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால், இரவு நேரத்தில் ரெயிலில் செல்லும் பயணிகள் திக்.. திக்.. நிமிடங்களாக அச்சத்துடனேயே பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து, ரெயில்வே போலீசார் ஒருவரிடம் கேட்டபோது, ‘சென்னையில் ரெயில்வே போலீசார் குறைவான அளவிலேயே உள்ளனர். காலிப் பணியிடங்கள் நிறைய நிரப்பப்படவில்லை. பணியில் இருப்பவர்களும் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர். இதனால், இரவு நேரத்தில் அவர்களுக்கு ரோந்து பணி வழங்க முடியாத நிலை உள்ளது’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.
தெற்கு ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவோடு, கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளையும் விரைவுபடுத்தினால் மட்டுமே தங்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று ரெயில் பயணிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story