பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு ‘சீல்’
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைத்து கலெக்டர் அம்ரித் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ஊட்டி
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைத்து கலெக்டர் அம்ரித் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கலெக்டர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உயிர்ச்சூழல் மண்டலமான நீலகிரி வனப்பகுதியை பாதுகாக்க கடைகள், வணிக நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு 2 மளிகை கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் கப்புகள், பைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
கடைகளுக்கு ‘சீல்’
ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்ததால் வாடிக்கையாளர்களை கடைகளை விட்டு வெளியேற்றினர். பின்னர் 2 கடைகளையும் மூடி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அங்கு காபி தூள் அரைக்கும் கடை உள்பட 2 கடைகளில் பிளாஸ்டிக் தட்டு, பைகள் விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் 2 கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி அருகே எம்.பாலாடாவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த ஒரு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆய்வின் போது ஊட்டி தாசில்தார் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் மகேந்திரகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறும்போது, நீலகிரியில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் யாரும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றார்.
அபராதம் வசூல்
ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை கோடப்பமந்து கால்வாயில் கொட்டியதுடன், தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது.
இதனை ஆய்வு செய்த ஊட்டி நகர்நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள், தங்கும் விடுதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். ஊட்டியில் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் கடைகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனையிட்டதில் 6½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பயன்படுத்தியவர்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story