நான் சிறை செல்ல தயார்- உத்தவ் தாக்கரே


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 March 2022 8:04 PM IST (Updated: 26 March 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

என் குடும்பத்தை பா.ஜனதா அவதூறு செய்ய வேண்டாம் என்றும், தான் சிறை செல்ல தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சட்டசபையில் பேசினார்.

மும்பை,
என் குடும்பத்தை பா.ஜனதா அவதூறு செய்ய வேண்டாம் என்றும், தான் சிறை செல்ல தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சட்டசபையில் பேசினார்.
சிறை செல்ல தயார்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மைத்துனர் ஸ்ரீதர் மாதவ் பதான்கர் நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்துகளை சமீபத்தில் அமலாக்கத்துறை முடங்கியது. இந்த நிலையில் மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பா.ஜனதாவை தாக்கி பேசினார். 
அவர் கூறியதாவது:-
நான் உங்கள் (பா.ஜனதாவினர்) முன்பு சொல்கிறேன். நான் உங்கள் குடும்பத்தினரை அவதூறு செய்யவில்லை. ஆனால் நீங்கள் என் குடும்பத்தை அவதூறு செய்கிறீர்கள். பா.ஜனதா ஆட்சி அமைவதற்காக நீங்கள் முயற்சிக்கிறீர்கள். இதற்காக நான் சிறை செல்ல தயார். ஆனால் என் குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை முடக்கி அவர்களை அவதூறு செய்ய வேண்டாம். அதேவேளையில் இந்த நடவடிக்கைக்காக நான் பயப்படபோவதில்லை. 
விசாரணைக்கு உத்தரவிடுங்கள் 
அவசர நிலை பிரகடனத்தை கொண்டு வர இந்திரா காந்திக்கு தைரியம் இருந்தது. ஆனால் நீங்கள் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை கொண்டு வருகிறீர்கள். 1992-ல் வன்முறையின் போது ஆபத்தில் இருந்த மும்பையை பாதுகாத்த சிவசேனா தொண்டர்களை துன்புறுத்தாதீர்கள். 
மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை நான் கேட்டுக்கொள்கிறேன். தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியின் போது மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான செலவீனம் திடீரென ரூ.10 ஆயிரத்து 269 கோடி உயர்ந்தது. இது குறித்து நீங்கள் விசாரணைக்கு உத்தரவிடுங்கள். இதன் பின்னணியை கண்டுபிடியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். 

Next Story