பேக்கரிகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
பேக்கரிகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் தேநீர், பேக்கரிகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 33 கிலோ கலப்பட டீத்தூள், 18 கிலோ அசைவ உணவு ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
தேநீர், பேக்கரிகளில் ஆய்வு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்படி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் மாவட்டம் முழுவதும் தேநீர் கடைகள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேநீர் கடைகள் மற்றும் பேக்கரிகளில் கலப்பட டீத்தூள் மூலமாக டீ விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 13 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளுக்கு அவற்றை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
கலப்பட டீத்தூள் பறிமுதல்
மேலும் தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தேநீர் கடையை ஆய்வு செய்தபோது கலப்பட டீத்தூள் கலந்து டீ விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கலப்பட டீத்தூள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 2 கடைகளிலும் உணவு பாதிரி பகுப்பாய்வுக்கு எடுக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் கலப்பட டீத்தூள் தொடர்பாக 5 உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் அவை தரமற்றது என்று அறிக்கை பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட 5 கடைக்காரர்கள் மீதும் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. கலப்பட டீத்தூளை பயன்படுத்திய டீயை குடிப்பதால் குடல் புண், புற்றுநோய் ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
18 கிலோ அசைவ உணவு பறிமுதல்
சில உணவகங்களில் நடந்த ஆய்வில், ஏற்கனவே சமைத்த அசைவ உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 18 கிலோ உணவுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. 2 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story