தொழிலாளர்கள் 2வதுநாளாக ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்கள் 2வதுநாளாக ஆர்ப்பாட்டம்
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை நிதி நெருக்கடியில் உள்ளது. அதனால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட வேண்டிய சம்பளம் அந்தந்த மாதங்களில் வழங்கப்படாமல் காலம் கடந்தே வழங்கப்பட்டுவருகிறது.
அதனால் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அத்துடன் இவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி (பி.எப்), பல மாதங்களாக பி.எப் அலுவலகத்திற்கு செலுத்தப்படாமல் நிலுவை உள்ளது. அதனால் ஓய்வு பெறும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் தாமதமாகிறது.
2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், நிலுவை உள்ள சம்பளத்தை வழங்கவேண்டும், பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனே செலுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலைத்தொழிலாளர்கள், ஆலைக்கு முன்பு நேற்று முன்தினம் காலை கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று மதியம் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story