துமகூரு விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு
துமகூரு பஸ் விபத்தில் மேலும் ஒரு மாணவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்கவில்லை என்று பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
துமகூரு: துமகூரு பஸ் விபத்தில் மேலும் ஒரு மாணவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்கவில்லை என்று பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
மேலும் ஒரு மாணவர் சாவு
துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா ஒய்.என்.ஒசக்கோட்டேயில் இருந்து பாவகடா நோக்கி சென்ற தனியார் பஸ், கடந்த 19-ந் தேதி பலவள்ளிகட்டே என்ற கிராமத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவிகளான சகோதரிகளான ஹர்ஷிதா, அமுல்யா உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த பஸ் விபத்தில் புரதரடிஹள்ளி கிராமத்தை சேர்ந்த மகேந்திரா(வயது 18) என்ற பி.யூ.கல்லூரி மாணவருக்கு முதுகு எலும்பு முறிந்தது. மேலும் தலையில் பலத்த காயம் அடைந்திருந்த மகேந்திரா பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் மகேந்திரா உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
படுக்கை கிடைக்கவில்லை
பிரேத பரிசோதனை முடிந்து மகேந்திராவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகேந்திராவின் உடலை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில் மகேந்திராவின் பெற்றோர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விபத்தில் சிக்கியதும் எனது மகனை துமகூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் அவரை பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். ஆனால் அங்கு படுக்கை இல்லை. வென்டிலேட்டர் வசதி இல்லை என்று கூறி சிகிச்சை அளிக்க மறுத்தனர். பின்னர் அவரை பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்றோம். அங்கேயும் படுக்கை கிடைக்கவில்லை. இறுதியாக அவரை விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். அவருக்கு ஏதாவது ஒரு ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைத்திருந்தால் காப்பாற்றி இருப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story