கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; லாரி உரிமையாளர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் லாரி உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி- ரெட்டம்பேடு சாலையில் உள்ள ஸ்ரீவாரி பாபா நகரை சேர்ந்தவர் மணி (வயது 60). லாரி உரிமையாளர். இவருக்கு சுமதி (54) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
நேற்று மாலை கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு சந்திப்பில் மணி தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டி நோக்கி திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் மணி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களான சாய்ராம் (21) மற்றும் டேனியல் (20) இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story