மாபெரும் புத்தக கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெறும் - கலெக்டர் பேட்டி
திருவள்ளூரில் நடைபெறும் முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெறும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறவுள்ள முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மணவாளநகர் வரை 10 கிலோமீட்டர் தொலைவுக்கு தானே மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் வந்த அரசு அலுவலர்கள், போலீசார் புத்தக கண்காட்சியை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதாகைகளை மோட்டார் சைக்கிளில் முன்பு வைத்து 50-க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளுடன் பின் தொடர்ந்து வந்தனர்.
பின்னர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பேரணியை முடித்த கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்ட மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சி வருகிற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறும். இந்த புத்தக கண்காட்சியில் 100 பதிப்பகங்கள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தகுந்தவாறும், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகம் வரையிலும் அனைத்து வகையான புத்தகங்களும் இடம்பெறும். ஒவ்வொரு நாளும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாநிலத்தில் புகழ்பெற்ற நட்சத்திர பேச்சாளர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் முதன்முதலாக இந்த புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்கும், சிறப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவில் இடம்பெறும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த புத்தக கண்காட்சி ஒரு பெரிய வாய்ப்பாக கருதி மக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். பொதுமக்களிடையே புத்தக கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் மாவட்ட வன அலுவலர் ராம்மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் திரளான போலீசார், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story