மணல் கடத்தலை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
மணல் கடத்தலை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்:-
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மணல் கடத்தல் நடப்பதை தட்டி கேட்ட ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி மகன் கணேஷ்குமார் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதுகுறித்து கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொள்ளிடம் கடைவீதியில் சிதம்பரம்- சீர்காழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிங்காரவேலன் மற்றும் பலர் கலந்து கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை சூப்பிரண்டு போலீஸ் லாமேக் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அங்கு 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story