அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்; அமைச்சர்கள் அறிவுறுத்தல்
அரசின் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என தூத்துக்குடியில் நேற்று நடந்த அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவுறுத்தினர்.
தூத்துக்குடி:
அரசின் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என தூத்துக்குடியில் நேற்று நடந்த அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவுறுத்தினர்.
அலுவலர்கள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மருத்துவம், சுகாதாரம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மீன் வளத்துறை, கால்நடைத்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
நிவாரண நிதி
அதை தொடர்ந்து மாநில நிதியுதவி திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து, தண்ணீரில் மூழ்கி, பாம்பு கடித்து மற்றும் கொரோனா தொற்று நோயினால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியின் மூலம் 10 பேருக்கு ரூ.59 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அதுபோல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் 3-ஆம் பாலினத்தவர்கள் சுயத்தொழில் தொடங்கும் பொருட்டு மானியம் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும், தோப்பூர் கிராம வன குழுவினருக்கு காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் சிறு தொழில் செய்வதற்கு உதவித் தொகையாக திருச்செந்தூர் வனச்சரகம் பகுதியை சேர்ந்த 5 பேருக்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கருத்துக்களை தெரிவித்தார். அதன் அடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து துறைகளிலும் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும். முதல்-அமைச்சரின் எண்ணத்தினை பிரதிபலிக்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து அனைத்து திட்டங்களின் பலன்களையும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி நாம் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
முதன்மை மாவட்டமாக...
கூட்டத்தில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை எல்லா துறைகளிலும் முன்னோடி மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற கனிமொழி எம்.பி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. அலுவலர்கள் தங்களின் பொறுப்பினை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story