கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம்
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையானது 40 கி.மீ தூரம் உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் மரக்காணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தாழங்காடு, மரக்காணம் தெற்கு சாலை, கழிக்குப்பம், அனுமந்தை, கூனிமேடு ஆகிய பகுதிகளையும், கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்புத்துப்பட்டு, பெரியமுதலியார்சாவடி ஆகிய இடங்களையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேற்று முன்தினம் இரவு நேரில் ஆய்வு மேற்கொண்டு போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதியில் விபத்துகளை குறைப்பதற்காக சாலையில் பேரிகார்டு, ஒளிரும் விளக்குகள், வேகத்தடைகள், உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் போதிய வெளிச்சம் ஏற்படுத்த தெரு விளக்குகள் ஆகியவற்றை அமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
எச்சரிக்கை
மேலும் விபத்துகளை குறைப்பதற்கு காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அதேநேரத்தில் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் போன்ற வாகன சட்ட விதிகளை பின்பற்றாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது மரக்காணம், கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story