விழுப்புரத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் நீச்சல் குளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது


விழுப்புரத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் நீச்சல் குளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது
x
தினத்தந்தி 26 March 2022 10:44 PM IST (Updated: 26 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் நீச்சல் குளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகம் அருகில் நீச்சல் குளம் உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த நீச்சல் குளம் கடந்த 27.4.2013 அன்று திறக்கப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். இதற்காக பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததோடு மட்டுமின்றி அவர்களது திறமைகளை சோதிக்கும் வகையில் மாதந்தோறும் நீச்சல் போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வந்தது. இங்கு கட்டணமாக தனிநபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.50-ம், மாதம் ரூ.700-ம், மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இங்கு நீச்சல் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர்.

காட்சிப்பொருளாக...

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நீச்சல் பயிற்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் நீச்சல் குளம் மூடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. இதையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்காக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள், வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆனால் இந்த நீச்சல் குளம் மட்டும் பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் வெறும் காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. நீச்சல் குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டதன் விளைவாக தற்போது இங்குள்ள நீர் சுத்திகரிப்பு மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. அதேபோல் நீச்சல் குளத்தின் வளாகத்தில் உள்ள நடைபாதைகளில் ஒரு சில இடங்களில் சிமெண்ட் தரைத்தளங்கள் பெயர்ந்து கிடக்கிறது. நீச்சல் குளத்தில் உள்ள கழிவறைகளும் பயன்பாடின்றி சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. 

சீரமைக்கப்படுமா

இதனால் நீச்சல் குளம் பொலிவிழந்து காணப்படுவதோடு மாணவ- மாணவிகளின் தொடர் பயிற்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று நீச்சல் பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீச்சல் போட்டியில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சிலர், இங்குள்ள நீச்சல் குளத்தின் அவல நிலையால் முறையான பயிற்சியை பெற முடியாமல் மாற்று விளையாட்டை நாடிச்செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோடைகாலம் நெருங்கி வருவதால் குளத்தில் மீண்டும் பயிற்றி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. எனவே இந்த நீச்சல் குளத்தை விரைவில் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீச்சல் குளத்தை சீரமைக்க அதிகாரிகள், திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அரசிடமிருந்து நிதி வரப்பெற்றதும் அனைத்து சீரமைப்பு பணிகளும் முடிந்து நீச்சல் குளம் தயாராகி விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story