பெரும்பான்மை இருந்தும் தி.மு.க. வேட்பாளர் தோல்வி
சின்னசேலம் பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் பெரும்பான்மை இருந்தும் தி.மு.க. வேட்பாளர் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர் வெற்றிபெற்று துணை தலைவரானார்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடந்தது. மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி நடைபெற்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில் 3-வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் லாவண்யா ஜெயகணேஷ் போட்டியின்றி பேரூராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெறவில்லை. இந்த தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி
இந்த நிலையில் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த 7-வது வார்டு கவுன்சிலர் அரசு, அ.தி.மு.க.வை சேர்ந்த 17-வது வார்டு கவுன்சிலர் ராகேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மொத்தம் 18 ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டன.
இதில் 11 ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர் ராகேஷ், பேரூராட்சி துணை தலைவரானார். தி.மு.க. கவுன்சிலர் அரசு 7 ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தார்.
தி.மு.க.வினர் கூச்சல்
இதனால் அதிருப்தி அடைந்த தி.மு.க.வினர் கூச்சலிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தேர்தலையொட்டி அங்கு பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராகேசுக்கு தி.மு.க. கவுன்சிலர்களும் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story