துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் தேர்வு


துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் தேர்வு
x
தினத்தந்தி 26 March 2022 11:07 PM IST (Updated: 26 March 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை நகராட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டை, 
பட்டுக்கோட்டை நகராட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். 
நகராட்சி தேர்தல்
பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் அ.தி.மு.க. 12 இடங்களிலும், த.மா.கா. ஒரு இடத்திலும், தி.மு.க. 12 இடங்களிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. 
கடந்த 4-ந்தேதி நகராட்சி தலைவர் தேர்தல் நடந்தது. இதில் 32-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சண்முகப்பிரியாவும், 17-வது வார்டு அ.தி.மு.க.கவுன்சிலர் லதாவும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் தி.மு.க. வேட்பாளர் சண்முகப்பிரியா 22 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லதாவுக்கு 11 வாக்குகளே கிடைத்தன. 
துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
அன்று மாலையில் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க. 12 பேரும், த.மா.கா.  ஒருவரும், சுயேச்சை 2 பேரும் என மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர். 
தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.வினர், தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. இதனால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 
அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் வெற்றி
இந்த நிலையில் நேற்று துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பட்டுக்கோட்டை நகராட்சி 11-வது வார்டு அ.தி‌.மு.க. கவுன்சிலர் சுரேஷ், 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலை தஞ்சாவூர் தனித்துணை கலெக்டர் (முத்திரைத்தாள்) பா.ஐவண்ணன் நடத்தினார். இதில் 33 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு வாக்கு அளித்தனர். 
இதில் 17 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. கவுன்சிலர் சுரேஷ் வெற்றி பெற்றார். தி.மு.க. கவுன்சிலர் குமாருக்கு 15 வாக்குகள் கிடைத்தது. ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் சுரேஷ் நகராட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
தேர்தலையொட்டி நகராட்சி அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story