வயல் வெளியில் மாட்டு கிடை போடுவதற்கு ஆர்வம் காட்டும் விவசாயிகள்


வயல் வெளியில் மாட்டு கிடை போடுவதற்கு ஆர்வம் காட்டும் விவசாயிகள்
x
தினத்தந்தி 27 March 2022 12:15 AM IST (Updated: 26 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் வயல் வெளியில் மாட்டு கிடை போடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

சீர்காழி:-

சீர்காழி பகுதியில் வயல் வெளியில் மாட்டு கிடை போடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

மண் வளம் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் இயற்கை உரத்தை பயன்படுத்தினர். சாம்பல், மக்கிய தழைகள், வண்டல் மண், ஆடு, மாடு ஆகியவற்றின் சாணங்களை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொண்டனர். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் மக்களுக்கு ஆரோக்கியத்தை தந்தது. 
ஆனால் தற்போது விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயற்கை உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதுடன், உணவு தானியங்களும் முன்பு போல சத்து நிறைந்ததாக இல்லை.  

மாட்டு கிடை போட ஆர்வம்

இந்த நிலையில் விவசாயிகள் தற்போது மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள். கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கு விவசாயிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொழுதூர் கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் மாட்டு கிடை போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  
வயல்களில் மாட்டு கிடை போடுவதன் மூலமாக இயற்கை உரம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மாட்டு கிடை போடுவதால் வயலின் மண் வளம் பாதுகாக்கப்படும். தொடர்ந்து செயற்கை உரங்களை பயன்படுத்தியதால் மண்வளம் பாதிக்கப்பட்டது. 

ரூ.1,000

இதை சரிசெய்யும் வகையில் வயல்வெளியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகளை மேயவிட்டுள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் சாணம் வயலுக்கு நன்மை விளைவிக்கிறது. ஒரு நாளைக்கு மாட்டு கிடை போடுவதற்கு மாடு உரிமையாளர்களுக்கு ரூ.1,000 வரை வழங்கி வருகிறோம்’ என்றார்.

Next Story