விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து வடக்கு மண்டல ஐ ஜி ஆலோசனை பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை


விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து வடக்கு மண்டல ஐ ஜி ஆலோசனை பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2022 11:11 PM IST (Updated: 26 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வடக்கு மண்டல போலீஸ் ஐ ஜி பிரேமானந்த் சின்ஹா பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்

விழுப்புரம்

ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதற்கு வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமை தாங்கி ரவுடிகள் மீதான நடவடிக்கை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, சாலை விபத்து தடுப்பு நடவடிக்கை, குற்ற வழக்குகள் உள்ளிட்டவை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிர ரோந்துப்பணி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.
அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்தி இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். 3 மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மிக முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபற்றி பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கவும் முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது நடவடிக்கை

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தல், சாராயம் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் தமிழக முதல்-அமைச்சர் வருகிற 5-ந் தேதி அரசு விழாவில் கலந்துகொள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி செல்வக்குமார், கடலூர் சக்திகணேசன் மற்றும் 3 மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.







Next Story