536 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்


536 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்
x
தினத்தந்தி 26 March 2022 11:15 PM IST (Updated: 26 March 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கியில் 536 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கியில் தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் அடகு வைத்த நகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் நகரமன்ற தலைவர் டி.என்.முருகன், விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் தங்கம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தேவி, விழுப்புரம் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராஜன்பாபு கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் முனிராஜ் வரவேற்றார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 536 பேருக்கு ரூ.2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழையும், அவர்கள் அடகு வைத்திருந்த நகைகளையும் வழங்கினார். 

தள்ளுபடிக்கு காலதாமதம் ஏன்?

பின்னர் அவர் பேசுகையில், இந்த திட்டத்தில் காலதாமதம் ஏற்பட்டதற்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளே காரணம். கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இணைந்து பல்வேறு தவறுகள் செய்ததன் காரணமாக இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கூட்டுறவு சங்கங்களில் குறைகள் களையப்பட்டு தகுதி அடிப்படையில் 5 பவுனுக்கும் குறைவாக உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருக்கோவிலூருக்கு பல திட்டங்கள் செயல்படுத்த தி.மு.க.வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா, நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி, நகர மன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரி குணா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன், அ.சா.ஏ. பிரபு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் டி.செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் ஆர்.மணி, ஒன்றிய துணை செயலாளர் எம்.கே.சங்கர், தொழிலதிபர் தியாகு, வர்த்தகர் சங்க தலைவர் கே.ஏ.ராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், லதாசரவணன், வினோபா, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வங்கியின் பொது மேலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Next Story